வெள்ளி, 24 ஜூன், 2016

Tagged Under:

கவிஞர். ஏரூர் கே. நெளஷாத் எழுதிய வெளிநாடு போன வெள்ளையனுக்கு

By: Unknown On: AM 11:22
  • Share The Gag
  • வெளிநாடு போன
    வெள்ளையனுக்கு
    அம்மா எழுதுகின்ற
    அன்பான மடல் ....
    அப்பன் உன்னை விட்டு
    ஆறு வயதில் போனதுமே
    தப்பான தொழிலெதுவும்
    தரங்கெட்டுப் பார்க்காது
    எப்போதும் வயலுக்குள்
    எடுபிடியா வேலை செய்து
    அப்போது படிப்பித்தேன்.
    அல்லல்களை அனுபவித்தேன்.
    அரை வயிறு கஞ்சி குடிச்சி
    ஆகாரம் உனக்கே தந்து
    நிறையு மட்டும் பார்த்திருந்து
    நீங்காம கண்விழித்தேன் .
    நிழல் போல காத்த மகன்
    நிம்மதியா வாழனும்னு
    அலையாத இட மலைந்து
    அனுப்பினேன் வெளிநாடு.
    போன ஆறு மாதம் வரை
    போடியாரு கடனடைத்தேன்.
    ஆனா மற்றக் கடனடைக்க
    " அனுப்பியா" பணமின்னு
    ஆறு மாதம் காத்திருக்கேன்.
    வீணா வட்டி பெருகிடிச்சி
    விதை நெல்லும் கருகிடிச்சி.
    தூணா இருந்த உன்னம்மா
    தொந்தரவால் இளைத்திருக்கேன்.
    வட்டிக்காசு இப்போ
    ரெட்டிப்பா மாறி
    குட்டி போட்டுப் போட்டு
    குவிஞ்சி கிடக்கிறது.
    குட்டியோட நீயிருந்து
    குதூகலமா வாழுறதா
    புட்டிகளோட நீயும்
    குடித்து மகிழுறதா
    பட்டிக்காரன் மகன் வந்து
    பழி சொல்லிப் போகின்றான்.
    வயல் வேலை செஞ்சி செஞ்சி
    வருடங்களா நானுழைச்சி
    வட்டியை கட்டுகிறேன்.
    வாரி வாரிக் கொட்டுகிறேன்.
    வயசு போன தாய்க்கு இப்ப
    வயல் வேலை செய்யவொண்ணா
    பழசு பட்ட கண்ணிரண்டும்
    பார்வையன்றி மங்களாச்சி .
    இருந்தாலும் என் மகனே!
    இறப்பதற்குள் நீ வந்து
    இருக்கின்ற கடனையெல்லாம்
    இல்லாமல் பண்ணி விடு.
    இழுத்துப் பிடித்து என்னுயிரை
    இதுவரைக்கும் வச்சிருக்கேன்.
    இப்படிக்கு …உன் தாய்.

    ஆக்கம் கவிஞர். ஏரூர் கே. நெளஷாத்


    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக