வியாழன், 26 மே, 2016

Tagged Under:

காலஞ்சென்ற ஊடகச்செம்மல் திரு.வீ.ஆர். வரதராயா பற்றய அஞ்சலிக் குறிப்பைபு.லெ.முருகபூபதி

By: Unknown On: AM 3:42
  • Share The Gag
  • காலஞ்சென்ற ஊடகச்செம்மல் திரு.வீ.ஆர். வரதராயா அவர்களுடன் வீரகேசரிப் பத்திரிகையில் பணியாற்றி இப்பொழுது Australiaவில் வசிக்கும் ஊடகவியலாளரும் பழம்பெரும் எழுத்தாளருமாகிய திரு.லெ.முருகபூபதி அவர்கள் அமரரைப் பற்றி எழுதி எனக்கு அனுப்பி வைத்த அஞ்சலிக் குறிப்பை இங்கு பதிவு செய்கின்றேன்.
    -----------------------------------------------------------------------------------
    அஞ்சலிக்குறிப்பு
    தமிழ் ஊடகப்பயணத்திலிருந்து விடைபெறும் வீ.ஆர். வரதராஜா
    வீரகேசரியின் படிகளிலிருந்து நீதிமன்ற படிகளுக்கு ஏறி இறங்கி செய்தி சேகரித்த மூத்த பத்திரிகையாளன்.
    யாழ்தேவி அன்றைய காலத்தில் யாருக்காக ஓடியது என்பதை வெளிப்படுத்திய செய்தியாளன்
    முருகபூபதி - அவுஸ்திரேலியா
    வீரகேசரி ஆசிரிய பீடத்தில் பணியாற்றிய காலத்தில் எம்முடன் இணைந்திருந்த சிலர் படிப்படியாக எம்மை விட்டு மறைந்துகொண்டிருக்கின்றனர். விதி தனது கடமையைச் செய்துகொண்டிருக்கும் சூழலில் நாமும் அயற்சியின்றி அஞ்சலிக்குறிப்புகளை தொடருகின்றோம்.
    வீரகேசரி தனது நூற்றாண்டை அண்மித்துக்கொண்டிருக்கையில், அங்கு தமது கையில் பேனை ஏந்தி எழுதிக்குவித்தவர்கள் நினைவில் வந்து செல்கின்றனர். இன்று காலம் மாறியிருக்கிறது. காலம் கணினியில் எழுதிக்குவிக்கத் தூண்டியுள்ளது.
    இம்மாதம் 22 ஆம் திகதி ஜெர்மனியில் வீரகேசரியின் முன்னாள் ஊடகவியலாளர் வீ.ஆர். வரதராஜா மறைந்துவிட்டார் என்ற துயரச்செய்தியை மின்னஞ்சலில் தாங்கி வந்தது அங்கு வதியும் எனது இலக்கிய நண்பர் ஏலையா முருகதாசனின் மடல். வரதராஜாவுக்கும் ஜெர்மனியிலேயே இவரை முந்திக்கொண்டு மறைந்துவிட்ட துணைஆசிரியர் சேதுபதிக்கும் சுமார் 33 வருடங்களுக்கு முன்னர் நாம் கொழும்பு கொள்ளுப்பிட்டி ரன்முத்து ஹோட்டலில் பிரிவுபசார விருந்து வழங்கி விடைகொடுத்தோம்.
    இருவரும் அன்று ஒன்றாகவே வீரகேசரியிலிருந்து விடைபெற்றனர்.
    இருவரும் ஜெர்மனிக்கே புலம்பெயர்ந்தனர். அப்பொழுது விசா கெடுபிடிகள் இருக்கவில்லை.
    வரதராஜா விடுமறை நாட்கள் தவிர்ந்த அனைத்து வேலை நாட்களிலும் கொழும்பு கிராண்ட்பாஸ் வீதியில் அமைந்த வீரகேசரி கட்டிடத்தின் படிக்கட்டுகளில் இறங்கி அருகில் இருக்கும் புதுக்கடையில் (ஹல்ஸ்டோர்ப்) அமைந்துள்ள நீதிமன்றங்களின் படிக்கட்டுகளில் ஏறி செய்தி சேகரித்துக்கொண்டு வரும் நீதிமன்ற நிருபராக பல வருடங்கள் இயங்கியவர்.
    இலங்கை தமிழர் அரசியலில் ஈடுபட்ட பலர் பிரபல சட்டத்தரணிகள் என்பது அறிந்த செய்தியே. அதனால் வரதராஜாவுக்கும் தமிழர் தரப்பு அரசியல் தலைவர்களுக்கும் இடையே நெருக்கமான நட்புறவு நீடித்திருந்தது. வரதராஜா எழுதும் செய்திகளினால் அந்தத் தமிழ் சட்டத்தரணிகளின் பெயர் மக்கள் மத்தியில் பிரபலமாகியிருந்தது.
    அவர்கள் வரதராஜாவுடன் தொடர்ச்சியாகத் தொடர்பில் இருந்தனர். அக்காலப்பகுதியில், அல்பிரட் துரையப்பா கொலை வழக்கு விசாரணை, ட்ரயல் அட் பார் விசாரணை, வண. பிதா. ஆபரணம் சிங்கராயர் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணை, குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை விசாரணை உட்பட பல வழக்குகளில் தமிழர்களும் தமிழ்த்தலைவர்களும் தமிழ் சட்டத்தரணிகளும் சம்பந்தப்பட்டிருந்தனர்.
    இவை தவிர போலின் டீ குரூஸ், வண. பிதா மத்தியூ பீரிஸ் சம்பந்தப்பட்ட சில கொலைச்சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளும் நடந்திருக்கின்றன. அதனால் வீரகேசரியின் தினசரி பதிப்புகளுக்கு வாசகர் மத்தியில் சிறந்த வரவேற்பிருந்தது.
    முதல் வெளியூர் பதிப்பில் வெளியாகும் வீரகேசரியின் உள்ளே சில பக்கங்கள் செய்திகளால் மாறியிருக்கும். அவை யாழ்ப்பாணம் பதிப்பு, கிழக்கிலங்கை பதிப்பு, மலையகப்பதிப்புகளுக்காக வேறுபட்டிருக்கும். அவை மாலை 7 மணிக்குள் அச்சாகிவிடும்.
    அந்தப்பதிப்புகள் இரவு புறப்படும் தபால் ரயில்களுக்காக அவசரமாக அச்சிடப்படும். ஆனால், நகரப்பதிப்பு நடு இரவும் கடந்து அச்சாகும்.
    நகரப்பதிப்பில் வெளியாகும் புத்தம் புதிய செய்திகள் மறுநாள் வெளியூர் பதிப்புகளில் இணைத்துக்கொள்ளப்படும்.
    எவ்வாறாயினும் இலங்கையில் வடக்கு, கிழக்கு, தெற்கு, மத்திய மலையக மாகாணங்களுக்கு உரிய முறையில் தமிழர் சம்பந்தப்பட்ட அனைத்து செய்திகளையும் வழங்கி மக்களின் அபிமான தினசரியாக வீரகேசரி விளங்கியது.
    அதற்குப்பின்னால் இருந்த கடின உழைப்பு பெறுமதியானது.
    இன்றுபோல் அன்று இருக்கவில்லை.
    அன்றைய கடின உழைப்புக்கு ஏற்ற ஊதியம் பத்திரிகையாளர்களுக்கும் அச்சுக்கோப்பாளர்களுக்கும் பக்க வடிவமைப்பாளர்களுக்கும் பிற ஊழியர்களுக்கும் கிடைத்ததா ? என்ற வினாவுக்கு பதில் இல்லை.
    1983 வன்செயல்களையடுத்து இலங்கையிலிருந்து தமிழர்கள் ஜெர்மனி, பிரான்ஸ் உட்பட பல அய்ரோப்பிய நாடுகளுக்கு படையெடுத்தனர். இந்நாடுகளுக்குச் செல்வதற்கு விசா கெடுபிடிகள் இல்லாதிருந்தமையால், அந்த வாய்ப்பை நண்பர்கள் சேதுபதியும் வரதராஜாவும் பயன்படுத்தினர்.
    வீரகேசரி நிருவாகத்தில் ஊதியம் தொடர்பாக பலருக்கும் அதிருப்தி இருந்தது உண்மை. ஆனால், அதனை பலரும் வெளிப்படுத்தாமல் பத்திகள் எழுதியும் தொடர்கதைகளை புனைபெயர்களில் எழுதியும் மேலதிக நேர வேலை செய்தும் வாழ்க்கைப்படகைச்செலுத்தினர்.
    துணை செய்தி ஆசிரியராக இருந்த கார்மேகம் 1983 வன்செயலுக்கு முன்னமே சென்னைக்குச்சென்று தினமணியில் இணைந்தார்.
    பிரதம ஆசிரியர் க. சிவப்பிரகாசம் வன்செயலால் பெரிதும் பாதிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தார்.
    அந்த வெற்றிடத்திற்கு வந்திருக்கவேண்டிய செய்தி ஆசிரியர் டேவிட்ராஜூ - அந்தப்பதவி கிட்டாத நிலையில் அதிருப்தியுற்று, மத்திய கிழக்கிற்கு தொழில் வாய்ப்பு பெற்றுச்சென்றார்.
    அதன்பின்னர் வீரகேசரியின் ஆசிரியராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் நூலகராகவும் பணியாற்றிய ஆ. சிவநேசச்செல்வன் வந்து இணைந்தார்.
    அவரது வருகையின் பின்னர் எனக்கும் நண்பர் வீ. தனபாலசிங்கத்திற்கும் ஒப்புநோக்காளர் பிரிவிலிருந்து ஆசிரிய பீடத்திற்கு வரும் வாய்ப்பு கிடைத்தது.
    நாம் இருவரும் துணை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டோம்.
    கார்மேகம் அவர்களுக்கான பிரிவுபசார நிகழ்வு சாந்திவிஹார் ஹோட்டலில் நடந்தது. அதனை அன்று பத்திரிகை கலை இலக்கிய நண்பர்கள் என்ற அமைப்பை தினகரன் ஆசிரியர் இ. சிவகுருநாதன் தலைமையில் இயக்கிவந்த பத்திரிகையாளர் எஸ். திருச்செல்வம் ஒழுங்குசெய்திருந்தார்.
    பிரதம ஆசிரியர் க. சிவப்பிரகாசத்திற்கு செய்தி ஆசிரியர் டேவிட்ராஜூ தலைமையில் வீரகேசரி ஆசிரிய பீடத்திலேயே சிறிய அளவில் தேநீர் விருந்துபசாரத்துடன் பிரியாவிடை தரப்பட்டது. அவருடைய அமெரிக்கப்பயணம் அவசரமாக இருந்தமையும் அதற்கு ஒரு காரணம்.
    டேவிட்ராஜூவும் விலகினார். கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் அவருக்கான பிரியாவிடை நிகழ்வு நடைபெற்றது.
    அடுத்து யார் விலகிச்செல்லப்போகிறார்கள் ? என்பதே ஆசிரியபீடத்தின் பிரதான பேசுபொருளாக விளங்கியது.
    செய்தி ஆசிரியர்களாக பணியாற்றிய டேவிட் ராஜூ மற்றும் நடராஜா, கார்மேகம், ஆகியோரும் மற்றும் துணை செய்தி ஆசிரியர்களான கண. சுபாஷ் சந்திரபோஸ், எட்வர்ட் ஆகியோரும் வரதராஜா நீதிமன்றங்களிலிருந்து எடுத்துவரும் செய்திகளை மக்களைக்கவரும் வகையில் பொருத்தமான தலைப்புகளை சூட்டி செம்மைப்படுத்துவர்.
    பல சந்தர்ப்பங்களில் வரதராஜா எழுதித்தரும் செய்திகளை செம்மைப்படுத்திய அனுபவமும் எனக்குண்டு. அதனால் அவருடன் நெருங்கிப்பழகும் நண்பர்கள் வட்டத்திலிருந்தேன். அவர் செய்திகள் மாத்திரம் எழுதவில்லை. மேலதிக ஊதியத்திற்காக பத்தி எழுத்துக்களும் மித்திரனில் தொடர்கதைகளும் எழுதுவார்.
    இவருடைய சகோதரர்தான் மொழிவாணன். அவரும் ஒரு பத்திரிகையாளர். ஆனால், அவர் Freelance Journalist ஆக வெளியிலிருந்து இயங்கினார். இன்றுவரையில் அவர் இலங்கையில் அவ்வாறு இயங்கிவருகிறார். எண்சோதிட பலன்களும் எழுதுவார்.
    வரதராஜா - வெளியூர் பயணங்கள் முடித்து திரும்புகையில் ஏதாவது புதினங்களுடன்தான் வருவார். அவற்றை பத்தி எழுத்துக்களாக தருவார். அவ்வாறு அவர் ஒரு தடவை யாழ்ப்பாணத்திற்கு யாழ்தேவியில் பயணித்துவிட்டு வந்து பயணிகள், இராணுவத்திற்கு பணையமாகியிருக்கும் அவலத்தை எழுதித்தந்தார்.
    தீவிரவாத இயக்கங்கள் இராணுவம் பயணிக்கும் வடபகுதி ரயிலை தாக்கிவிடும் அபாயம் இருந்தது. ஒரு பாரிய தாக்குதலும் நடந்திருக்கிறது. அதனை டெலோ இயக்கம் செய்ததாக செய்தி வெளியானது. இராணுவத்தினர் தம்மைப்பாதுகாக்க ஆனையிரவு மற்றும் வடபகுதி முகாம்களுக்குச்செல்லும்பொழுது, அந்த ரயில்களில் பயணிக்கும் பொதுமக்களை பணயமாக்கி வந்தனர். கிளிநொச்சியில் இறங்கவேண்டிய பயணிகள் இராணுவத்துடன் ஆனையிரவு முகாம் வரையில் அநாவசியமாக பயணித்து திரும்பினர்.
    அந்த அநாவசிய பயணத்திற்கு இலக்காகியிருந்த வரதராஜா எழுதித்தந்த செய்தியை மேலும் செம்மைப்படுத்துவதற்காக செய்தி ஆசிரியர் நடராஜா அந்தப்பிரதியை எனது மேசைக்கு அனுப்பியிருந்தார். நானும் செம்மைப்படுத்திய பின்னர், ஒரு தலைப்பிட்டு அவரிடம் கொடுத்தேன்.
    ' நடா ' என்று நாம் செல்லமாக அழைக்கும் நடராஜா, அதற்கு மிகவும் பொருத்தமான கவித்துவம் நிரம்பிய தலைப்பை சூட்டினார்.
    அந்தத்தலைப்பு:
    யாழ்தேவி, நீ யார் தேவி. ஓடுவதும் நிற்பதும் யாருக்காக?
    அந்தத்தலைப்பின் கீழே அதனை எழுதியவரின் பெயராக வீ.ஆர். வரதராஜா என்றுதான் இருக்கும்.
    ஆசிரியபீடம் என்பது ஒருவகையில் குழுநிலைப்பணியாகும். அதாவது Team Work.
    குழுநிலைப்பணிகள் , குழுவாதமாகவும் அணிதிரட்டும் பக்கவாதமாகவும் மாறிவிடக்கூடாது. அவ்வாறு மாறிவிட்டால் சிக்கல்தான். இந்த நிலைமைதான் அரசியல் கட்சிகளிடத்திலும் பொது அமைப்புகளிலும் நீடித்திருக்கும் நிரந்தர இலட்சணம்.
    வரதராஜாவுக்கும் சேதுபதிக்கும் வீரகேசரியின் அன்றைய கால கட்ட நிருவாகத்திலிருந்த அதிருப்தியை அன்று ரண்முத்து ஹோட்டலில் நாம் நடத்திய அவர்களுக்கான இராப்போசன விருந்துபசார பிரியாவிடை நிகழ்வில் காணமுடிந்தது.
    எம்மில் பலர் அவர்களின் சேவைகளைப்பாராட்டிப் பேசியதையடுத்து - ஒரு சகோதரி பாடல்கள் பாடி, நடனமும் ஆடினார். அவர் அங்கு ஓவியராக பணியாற்றியவர். அத்துடன் அவர் நாடகக்கலைஞருமாவார். அதனால் அவர் மேடைக்கூச்சமின்றி பாடி ஆடினார்.
    ஆனால், இறுதியாக தமது ஏற்புரைகளை வழங்கிய வரதராஜாவும் சேதுபதியும் தமது உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்தி அங்கிருந்த சில மேலதிகாரிகளை கூச்சப்படுத்தினர்.
    அவர்கள் வீரகேசரியிலிருந்து விடைபெறுவதற்கான காரணத்தை வெளிப்படுத்தினர். அந்தக்காரணங்களில் ஊதியம் (Salary ) ஊக்கமளிப்பு (Appreciation) முதலான வார்த்தைப்பிரயோகங்கள் காணப்பட்டன.
    நாம் மௌனமாக கேட்டுக்கொண்டிருந்தோம்.
    அவர்கள் இருவரும் குடும்பமாகவே ஜெர்மனிக்கு புலம்பெயர்ந்தனர். அதன்பின்னர் தொடர்புகள் அற்றுப்போனது.
    நானும் 1987 இல் அவுஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டேன்.
    எனினும் இந்தப்பிரிவுபசார சடங்குகளுக்குட்படாமல் நாட்டைவிட்டு வெளியேறிய நாள் முதலாக எந்த ஊதியமும் ஊக்கமளிப்பும் எதிர்பார்க்காமலேயே தொடர்ச்சியாக வீரகேசரிக்கும் இதர இதழ்கள் ஊடகங்களுக்கும் எழுதிக்கொண்டிருக்கின்றேன். அந்த வரிசையில் இன்று நண்பர் வரதராஜாவின் மறைவுக்காக அஞ்சலிக்குறிப்பு எழுதுகின்றேன்.
    இதுவரையில் வீரகேசரி குடும்பத்தில் இணைந்திருந்த பலர் பற்றியும் எழுதிவிட்டேன். அவர்களில் சிலர் நினைவுகளைத்தந்துவிட்டு, நிரந்தரமாக விடைபெற்றுவிட்டனர்.
    இம்மாதம் 22 ஆம் திகதி முதல் நண்பர் வரதராஜாவும் இந்தப்பட்டியலில் சேர்ந்துவிட்டார்.
    புலம்பெயர்ந்த பின்னர், வரதராஜாவின் எழுத்துக்களை ஜெர்மனியில் நண்பர் இந்துமகேஷ் வெளியிட்ட பூவரசு இதழிலும் நண்பர் குகநாதனின் பாரிஸ் ஈழநாடு, மற்றும் ஈழமுரசு முதலான இதழ்களிலும் அவ்வப்போது படித்திருக்கின்றேன்.
    உள்ளார்ந்த ஆற்றல் மிக்க எவரும் தாம் நேசித்த தொழிலை, உலகின் எந்தப்பகுதிக்குச்சென்றாலும் தொடருவார்கள் என்பதற்கு வரதராஜாவும் ஒரு சாட்சி.
    அவர் ஜெர்மனியிலிருந்தவாறு அய்ரோப்பிய நாடுகளில் ஒலித்த - ஒளிபரப்பான ஊடகங்களிலும் பேசியவர். தான் முன்னர் பணியாற்றிய வீரகேசரியின் வார வெளியீட்டிலும் அரசியல் பத்திகள் எழுதியவர்.
    1990 ஆம் ஆண்டளவில் நான் அவருடைய முகவரியை தேடி எடுத்து கடிதம் எழுதியிருந்தேன். அச்சமயம் அவுஸ்திரேலியாவில் இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு உதவும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தையும் அவுஸ்திரேலியாவில் தொடக்கியிருந்தேன்.
    வெளிநாடுகளிலிருந்தும் அதற்கு ஆதரவு திரட்டும்பொருட்டு, நான் வரதராஜாவுக்கு எழுதிய கடிதத்திற்கு தாமதமின்றி அவர் பதிலும் எழுதியிருந்தார். இன்றும் அந்தக்கடிதம் என்வசம் கோப்பில் பத்திரமாக இருக்கிறது.
    அச்சமயம் அவர் விடுதலைப்புலிகளிலும் அதன் தேசியத்தலைவரிடத்திலும் தீவிரமான நம்பிக்கை வைத்திருந்தார். நான் அவுஸ்திரேலியாவில் தொடரும் பணியை வாழ்த்தியதுடன், " அந்தப்பணி எதிர்காலத்தில் அவசியமற்றுப்போகும் வகையில் விரைவில் தமிழ் ஈழம் மலர்ந்துவிடும் " என்றும் அவர் எழுதியிருந்தார்.
    அவருடைய நம்பிக்கையில் எனக்கு நம்பிக்கை இல்லை. எனது நம்பிக்கையில் அவருக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், எமது நட்பில் என்றைக்கும் நம்பிக்கையற்றுப்போகும் வகையில் நாம் நடந்துகொள்ளவும் இல்லை.
    அதனால்தான் எனது சக தோழன் பற்றிய அஞ்சலிக்குறிப்புகளை கண்ணீர் மல்க எழுதுகின்றேன்.
    வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்ற இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் பலரும் பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் நடத்துகிறார்கள்.
    சிலர் அவ்வாறு நடத்தாமலேயே தொடர்ந்தும் ஊடகங்களுக்கு எழுதிவருகின்றனர். அந்த வரிசையில் இணைந்திருந்த வரதராஜாவின் கை , இன்று நிரந்தரமாக ஓய்ந்துவிட்டது. வெளிநாட்டிலிருந்து ஊதியம் எதனையும் பெறாமல் தமது ஆத்ம திருப்திக்காக எழுதிக்குவித்தவர்களில் ஒருவர் வரதராஜா.
    தத்தமது குடும்பங்களுக்காக வெளிநாடுகளில் தமது ஆத்மார்த்த நேசிப்புத்தொழிலுக்கு மாற்றாக வேறு தொழில்களில் ஈடுபட்டவர்கள்தான் இந்தத் தமிழ்ப்பத்திரிகையாளர் கூட்டம்.
    வரதராஜாவும் ஜெர்மனியில் ஒரு தொழிற்சாலையில் நீண்ட காலம் பணியாற்றினார். ஓய்வுபெறும் காலம் வந்துவிட்ட பின்னரும் சோர்வின்றி உழைத்தார். அவர் பணியாற்றிய வேலைத்தலத்தின் சுற்றுச்சூழல் அவருடைய சுவாசக்குழாய்களுக்கு பக்க விளைவுகளைத்தந்திருப்பதாக அறியமுடிந்தது.
    உணவுப்பழக்க வழக்கம், வாழ்க்கை, தொழில், மருந்து மாத்திரைகள், சுற்றுச்சூழல் என்பன மனிதர்களுக்கு பக்க விளைவுகளாக சில நோய்களை சொந்தமாக்கிவிடுகின்றன.
    அவ்வாறு ஒரு பக்கவிளைவை நண்பர் வரதராஜாவின் உடல் தாங்கியிருந்து, கடந்த 22 ஆம் திகதி அவருக்கு விடுதலை வழங்கியிருக்கிறது.
    ஏற்கனவே அவர் தமது மனைவியை இழந்துவிட்டிருக்கிறார். இன்று அவரும் மனைவி சென்ற இடத்திற்குச்சென்றுள்ளார்.
    அன்று சுமார் 33 வருடங்களுக்கு முன்னர் கொழும்பு கொள்ளுப்பிட்டி ரண்முத்து ஹோட்டலில் நண்பர்கள் வரதராஜாவுக்கும் சேதுபதிக்கும் வீரகேசரி குடும்பம் பிரியாவிடை வழங்கியது.
    அன்று அவர்கள் இருவரையும் கட்டித்தழுவினேன்.
    அதன்பின்னர் அவர்களைப்பார்க்கக் கிடைக்கவில்லை.
    இன்று நினைவுகளினால் அவர்களின் ஆத்மாக்களை கட்டித்தழுவுகின்றேன்.
    புலம்பெயர் வாழ்க்கை இப்படித்தான் எமக்கு வாய்த்திருக்கிறது.

    0 கருத்துகள்:

    கருத்துரையிடுக